சென்னை அம்பத்தூரில், ‘கன்ட்ரோல் எஸ். டேட்டா சென்டர்ஸ்’ நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன தரவு மையத்தை உருவாக்கியுள்ளது. இரு கட்டடங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், 72 மெகாவாட் ஐ.டி. லோடு திறன் உடையதாக அமைந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக, 7.50 ரிக்டர் அளவுக்குத் தாங்கும் நிலநடுக்க பாதுகாப்பும், வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் மேம்பட்ட வடிவமைப்பும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதனைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய், கன்ட்ரோல் எஸ். டேட்டா சென்டர்சின் தலைவர் ஸ்ரீதர் பின்னபுரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஸ்ரீதர் பின்னபுரெட்டி, சர்வதேச தரவுகளை பூர்த்தி செய்யும் முதன்மையான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கில், சென்னையில் தரவு மைய பூங்காவை திறப்பது முக்கியமான முன்னேற்றம் எனக் கூறினார். இந்த மையத்தினால் 4,000 கோடி ரூபாய் நேரடி முதலீடுகளும், 50,000 கோடி ரூபாய் மறைமுக முதலீடுகளும் கிடைக்கும் என்பதோடு, 500 நேரடி வேலைவாய்ப்புகளும், 9,000 மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன.
‘கிளவுட்’ அடிப்படையிலான சேவைகளை மேம்படுத்துவதோடு, தரவு பாதுகாப்பிற்கும் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. இந்த புதிய தரவு மையம், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.