மும்பை: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,267 புள்ளிகளும், நிஃப்டி 742.85 புள்ளிகளும் சரிவு அடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் இன்று கடும் ஆட்டம் கண்டன. அமெரிக்கா முதல் இந்திய பங்கு சந்தை வரை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜெர்மனி பங்குச் சந்தை 10 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை இன்று கடும் சரிவை சந்தித்தன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,364.69 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
மதியம் ஒரு மணி வரை சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இறுதியாக 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 73,403.99 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 71,425.01 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போல், இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று தொடக்கத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.