அமெரிக்கா: டிரம்புக்கு முதல் பதிலடி கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் அங்கு இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை கடுமையாக உயரும். இதன் விளைவாக வெளிநாட்டு கார்களின் விற்பனையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டாடா மோட்டார்ஸ் உள்பட பல வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க தொடங்கின.
இதற்கிடையே அமெரிக்க அரசாங்கத்தின் இறக்குமதி கார்களுக்கு மீதான 25 சதவீத வரி கடந்த 3ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு கார்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறவனத்தின் முக்கிய வருவாய் உந்து சக்தியாக ஜேஎல்ஆர் உள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 38,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் மொத்தம் 4,30,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இதில் சுமார் 1,07,500 கார்கள் வட அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளதாக அதன் ஆண்டு அறிக்கை கூறுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் கார்கள் மீதான 25 சதவீத இறக்குமதி வரி கடந்த 3ம் தேதி அமலுக்கு வந்ததால், ஜேஎல்ஆர் தொடர்ச்சியான செலவு மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. மேலும் டிரம்பின் விரிவடைந்து வரும் வர்த்தக போரின் நிதிப் பாதிப்பை குறைக்க வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஜேஎல்ஆர் நிறுவனம், தனது சொகுசு கார்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 7 (நாளை) முதல் இது அமலுக்கு வரும் என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்புக்கு இது பதிலடியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் அதன் முன்னோக்கி செல்லும் பாதையை மீண்டும் கணக்கிட கட்டாயப்படுத்துகிறது.
ஜேஎல்ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் ஆடம்பர பிராண்டுகள் உலகளாவிய ஈர்ப்பை கொண்டுள்ளன. மேலும் எங்கள் வணிகம் மீள்தன்மை கொண்டது, மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு பழக்கமானது. எங்கள் முன்னுரிமைகள் இப்போது உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதும், இந்த புதிய அமெரிக்க வர்த்தக விதிமுறைகளை நிவர்த்தி செய்தல் என்று தெரிவித்துள்ளது.