வீடுகளில் சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் (5 கிலோ மற்றும் 14.2 கிலோ அளவில்) வரும் போது, மக்கள் பொதுவாக அதன் சீல் மற்றும் எடை சரிபார்க்கிறார்கள். ஆனால் சிலிண்டரின் மேற்பரப்பில் காணப்படும் குறியீட்டை பெரும்பாலோர் காலாவதி தேதி என்று தவறுதலாக நினைக்கிறார்கள். உண்மையில், இது “சோதனை தேதி” (Test Date) ஆகும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் படி, எல்பிஜி சிலிண்டர்கள் வலுவான எஃகால் தயாரிக்கப்படுகின்றன மற்றும் BSI 3196 தரநிலைகளின் கீழ் CCOE மேற்பார்வையில் ஆய்வு செய்யப்படுகின்றன.
முதல் முறையாக, சிலிண்டரை 10 ஆண்டுகள் பயன்படுத்திய பின் சோதனைக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் Statutory Testing & Painting (ST&P) செய்யப்படுகிறது. குறியீட்டில் இருக்கும் எழுத்தும் எண்ணும், சோதனை செய்ய வேண்டிய காலத்தை குறிக்கின்றன. உதாரணமாக, “C27” என்றால், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் 2027க்குள் சிலிண்டரை சோதிக்க வேண்டும்.
சோதனை முடிந்த பிறகு, தோல்வியடைந்த சிலிண்டர் மாற்றப்படும்; தேர்ச்சி பெற்ற சிலிண்டர் மீண்டும் வண்ணம் தீட்டப்பட்டு புதிய சோதனை தேதியுடன் வழங்கப்படும்.
புதிய சிலிண்டர் வாங்கும் போது, சோதனை தேதியை சரிபார்க்க வேண்டும். துருப்பிடித்த அல்லது சேதமடைந்த சிலிண்டர் வந்தால், உடனடியாக விநியோக முகவருக்கு தெரிவிக்க வேண்டும்.