மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8ஆவது ஊதியக் குழு நடைமுறை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில் அரசு குழுவை அமைப்பதாக அறிவித்திருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. உறுப்பினர்கள் நியமனம், வழிமுறைகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் ஆரம்பிக்காததால் ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் கவலை அடைந்துள்ளனர்.

முந்தைய அனுபவங்களைப் பார்த்தால், ஒரு ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. 6ஆவது ஊதியக் குழுவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்வதற்கு 22–24 மாதங்கள் ஆனது. அதேபோல் 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வர 33 மாதங்கள் எடுத்தன. இதனால், 8ஆவது ஊதியக் குழுவும் 2028ஆம் ஆண்டுக்குள் தான் முழுமையாக அமல்படுத்தப்படும் என கணிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், 2026 ஜனவரி 1 முதல் பின்னோக்கி அமல்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது, தாமதமாகும் காலத்திற்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும். இருப்பினும், தற்போதைய விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் ஊழியர்கள் விரைவில் குழு பணிகள் தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சம்பள உயர்வு மட்டுமின்றி, ஓய்வூதியம், அகவிலைப்படி, நிதி பாதுகாப்பு ஆகியவற்றையும் தீர்மானிக்கும் 8ஆவது ஊதியக் குழு குறித்த இறுதி அறிவிப்புக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தாமதம் நீண்டால், 2028வரை காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.