சந்தை அபாயங்கள் இல்லாமல் பாதுகாப்பாக வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்காக, நிலையான வைப்புத் தொகை (FD) ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. குறிப்பாக, 2025-இல், சில சிறு நிதி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 8%க்கும் மேற்பட்ட வட்டி விகிதங்களை வழங்கி, முதலீட்டாளர்களை கவரும் வகையில் செயல்படுகின்றன. இந்த திட்டங்கள், உங்கள் சேமிப்பை வளர்க்க மட்டுமின்றி, வருங்கால தேவைகளுக்கான நிதி ஆதாரமாகவும் பயன்படுகின்றன. குறிப்பாக, ஷிவாலிக், பஜாஜ், உத்கர்ஷ், சூர்யோதய் மற்றும் ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள் தற்போது FD-க்கு சிறந்த தேர்வுகளாக இருக்கின்றன.

உத்கர்ஷ் சிறு நிதி வங்கியில், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களில், அதிகபட்சமாக 8.50% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச முதலீடு ₹5,000 ஆகும். இதேபோன்று, சூர்யோதய் சிறு நிதி வங்கியும் 8.40% வட்டியில் FD வழங்குகிறது. இவை இரண்டும் பாதுகாப்பான வங்கிகள் என்பதுடன், FD காலம் மற்றும் வாடிக்கையாளர் வகையின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் மாறக்கூடும். FD செய்து வருமானம் பெற விரும்புவோருக்கு, இவை நிச்சயமாக ஒரு நலவாய்ந்த விருப்பமாக அமையும்.
நிதி நிறுவனங்களாக செயல்படும் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், முறையே 8.90% மற்றும் 8.00% வரை FD வட்டியை வழங்குகின்றன. NBFC எனப்படும் இந்த நிறுவனங்களில், வங்கி FD போல பாதுகாப்பு வழங்கப்படும் என்பதற்காக DICGC உத்தரவாதம் கிடைக்காது. எனினும், FD தொகை குறைவாகவும் வட்டி விகிதம் அதிகமாகவும் இருப்பதால், இதைத் தேர்வுசெய்வது நல்ல லாபத்தை உருவாக்கும். பஜாஜ் நிறுவனம் 5,000 ரூபாயில் FD தொடங்கும் வசதியையும் வழங்குகிறது.
ஏற்கனவே FD-க்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதால், சந்தை ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாது. DICGC உத்தரவாதத்தின் கீழ், வங்கிகளில் FD செய்த தொகை ₹5 லட்சம் வரை பாதுகாப்பாக இருக்கும். FD-யின் முக்கிய நன்மைகளில் ஒன்று, மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுவது; அவர்கள் 0.25% முதல் 0.75% வரை கூடுதல் பெறுவார்கள். மேலும், அவசர தேவைக்கு, FD-யை முற்றிலும் கலைக்காமல், அதன் மீது 90% வரை கடனாகப் பெறும் வசதியும் உள்ளது.