கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், சாதாரண மக்களால் தங்கம் வாங்குவது கடினமாகி வருகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது குறையுமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.
பொருளாதார மற்றும் முதலீட்டு உலகில் சிறந்த அறிமுகம் பெற்றிருக்கும் ‘ரிச் டாட் பூர் டாட்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் தங்கத்தின் எதிர்காலத்தைப் பற்றி கருத்து தெரிவித்தார். சமூக ஊடக தளமான X-இல் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா ஒரு பெரிய பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்கிறது என்றாலும், இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை என்றும் கூறினார்.

வேலையின்மை, ஓய்வூதிய குறைபாடு போன்ற பொருளாதார சிக்கல்கள் இன்னும் தீவிரமாகும் எனவும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்ற சொத்துகள் பாதுகாப்பான முதலீடாக இருப்பதாகவும் கியோசாகி தெரிவித்துள்ளார். இதை தனது புத்தகங்களிலும் முன்னதாக கூறியிருந்தார்.
தற்போதைய சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்னடைவு அதிகமாகும் என எச்சரிக்கும் கியோசாகி, 2035ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 30,000 அமெரிக்க டாலரை (சுமார் ரூ.25 லட்சம்) தாண்டும் என்றும் கூறுகிறார். மேலும், சுவிஸ் ஆசியா கேபிட்டலின் ஜூர்க் கைனர் உள்ளிட்ட நிபுணர்களும் தங்கத்தின் விலை நிலையாக உயரக்கூடும் என எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை எதிர்காலத்தில் எப்படி மாறும் என்பது சந்தையின் நிலையைப் பொறுத்தது என்றாலும், தற்போது சராசரி மக்களிடம் இது ஒரு பெரும் தலைவலியாகவே இருக்கிறது.