லாபகரமாக செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் அரசின் பங்கை குறைத்துக் கொள்வதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது. இதன் வாயிலாக, பல நிறுவனங்களின் வர்த்தகத்தில் தனது செயல்பாட்டை விலக்கிக்கொள்ள விரும்பியது. இதற்காக, பங்கு விலக்கல் துறை தீவிரமாக செயல்பட்டு, அரசின் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டி வந்தது.
ஆனால், மோடி 3.0 அரசு பொறுப்பேற்றதில் இருந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் வேகம் குறைந்து, தற்போது அதன் கொள்கையில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப, நஷ்டத்தில் தள்ளாடும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க, இந்த ஆண்டின் முதல் ஒரு மாதத்திலேயே, 15 பில்லியன் டாலர், அதாவது 1.30 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக, பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவு தற்போதைக்கு கைவிடப்பட்டிருக்கிறது. பவன் ஹன்ஸ், என்.பி.சி.சி., எம்.எம்.டி.சி., ஹட்கோ, மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ், பெர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்க தனியார் முன்வராததும், அரசின் கொள்கை மாற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்நிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாலும் அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
தனியார்மயத்தில் தப்பியவை:
பவன் ஹன்ஸ், என்.பி.சி.சி., எம்.எம்.டி.சி., ஹட்கோ, மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ், பெர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஆர்.ஐ.என்.எல்., எம்.டி.என்.எல்., ஐ.டி.பி.ஐ., வங்கி.