மும்பை: சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததால் இந்திய பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. 30 முன்னணி நிறுவன பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இன்டெல் மற்றும் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களின் வருவாய் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இத்தகைய தரவுகள் உலகளாவிய பங்கு வர்த்தகத்தை எடைபோடுகின்றன, ஏனெனில் முதலீட்டாளர்கள் அமெரிக்கா மந்தநிலையை நோக்கிச் செல்வதற்கான அறிகுறியாகக் கருதினர். இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம், பங்கு வர்த்தகத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.15.34 லட்சம் கோடி குறைந்து ரூ.441.82 லட்சம் கோடியாக உள்ளது. டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதற்கிடையில், FMCG துறை பிரிட்டானியா, HUL மற்றும் நெஸ்லே பங்குகள் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,222 புள்ளிகள் இழந்து 78,759 புள்ளிகளுடனும், நிஃப்டி 662 புள்ளிகள் இழந்து 24,055 புள்ளிகளுடனும் உள்ளன.