தங்கத்தின் விலை ஏற்கனவே உயர்ந்த நிலையில், தற்போது முதலீட்டாளர்கள் வெள்ளியின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர். 2025ஆம் ஆண்டு, வெள்ளி விலை கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இது முக்கியமாக தொழில்துறையில் வெள்ளிக்கான தேவையை அதிகரித்ததே காரணமாகும். சூரிய சக்தி பேனல்கள், மின்சார வாகன பேட்டரிகள், வயரிங், சென்சார், மற்றும் AI தொழில்நுட்பங்களில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வளர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் வெள்ளிக்கான தேவை தொடர்ந்தும் அதிகரிக்கப்போகிறது.

வெள்ளியின் விலை ஏற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் விநியோகப் பற்றாக்குறையாகும். மார்க்கெட் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த சிக்கலை எதிர்கொள்கிறது. சுமார் 149 மில்லியன் அவுன்ஸ் அளவிற்கு தேவை விநியோகத்தைவிட அதிகமாக உள்ளது. மறுசுழற்சி முயற்சிகள் செலவுகளும், தொழில்நுட்ப சிக்கல்களாலும் குறைந்துள்ளன. அதே சமயம் மெக்சிகோ, சீனா போன்ற முக்கிய உற்பத்தி நாடுகளில் அரசியல் பதட்டங்கள் மற்றும் தரத்தில் உள்ள சிக்கல்களும் வெள்ளியின் குறைந்த விநியோகத்திற்கு காரணமாக உள்ளன.
தங்கம்-வெள்ளி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்டதாக இருந்தது. தற்போது இது 89-ஆக குறைந்துள்ளது. வரலாற்று ரீதியாக இந்த விகிதம் 60-க்கு அருகில் நிலைத்திருந்ததால், எதிர்காலத்தில் இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளி விலை \$42 முதல் \$48 வரை உயரக்கூடும். இது முதலீட்டாளர்களுக்கு வெள்ளியை தற்போது குறைந்த மதிப்பில் வாங்கி எதிர்கால லாபத்திற்கான வாய்ப்பாக மாற்றி வருகிறது.
வெள்ளி முதலீட்டை எளிமையாக அணுகுவதற்கான வழிகளாக Silver ETFs மற்றும் Fund of Funds போன்ற திட்டங்கள் கிடைக்கின்றன. தற்போது தங்கத்தின் விலையை பொறுத்தமட்டில், வெள்ளி ஒரு பாதுகாப்பான, நம்பகமான, மற்றும் தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சியை பார்வையில் கொண்டு உருவாக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்பாகும். இந்த சூழலில், வெள்ளியில் முதலீடு செய்வது சிறந்த தீர்வாக இருக்கக்கூடும். ஆனால், எந்த முதலீட்டுக்கும் முன் நிதி ஆலோசகரின் கருத்தை பெறுவது அவசியம்.