நிதி மோசடிகள் அதிகரித்து வரும் காலத்தில், பான் கார்டு நம்பரை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. பலர் தங்களுடைய பான் கார்டு நம்பரை பாதுகாப்பற்ற இணைய தளங்கள் மற்றும் செயலிகளில் பகிர்வதன் மூலம், தங்கள் பெயரில் யாரோ கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பின்னர் தான் அறிந்து கொள்கிறார்கள். பான் கார்டு என்பது உங்கள் கடன் வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆவணமாகும். எனவே, யாராவது அதை தவறாக பயன்படுத்தினால், அதன் விளைவாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம். இதை தடுக்கவும், உங்களின் பெயரில் எந்தவொரு போலியான கடனும் எடுக்கப்படவில்லையா என்பதை அறியவும் சில எளிய வழிகள் உள்ளன.

உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி சரிபார்ப்பது இதற்கான முதல் படியாகும். சிபில், எக்விஃபாக்ஸ், எக்ஸ்பீரியன் மற்றும் சிஆர்ஐஎப் ஹைமார்க் போன்ற நிதி நிறுவனங்கள் பான் கார்டு விவரங்களின் அடிப்படையில் கடன் பதிவுகளை பராமரிக்கின்றன. அந்த இணைய தளங்களில் உங்களுடைய பான் நம்பரையும் மொபைல் நம்பரையும் பயன்படுத்தி இலவசமாக ஆண்டு ரிப்போர்ட்டை பெறலாம். அதில் உங்களால் எடுக்கப்படாத கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு கணக்குகள் இருந்தால், அது பான் கார்டு மோசடி நடந்திருக்கலாம் என்பதற்கான அடையாளமாகும்.
அப்படி போலியான கடன் இருப்பது தெரிந்தால், உடனடியாக அந்த கடன் வழங்கிய வங்கியையும் நிதி நிறுவனத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான அடையாள ஆவணங்களுடன் புகார் மனு அளிக்கவும். கூடுதலாக, சைபர் கிரைம் பிரிவிலும் புகார் பதிவு செய்வது அவசியம். இது உங்களுடைய பெயரை எதிர்காலத்தில் எந்தவொரு சட்ட பிரச்சனையிலிருந்தும் காக்கும். மேலும், பான் கார்டு தொலைந்தால் உடனே புதியது பெற விண்ணப்பிக்கவும், அடுத்த சில மாதங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை கவனமாக கண்காணிக்கவும்.
பான் கார்டு நம்பரை வங்கி பின் நம்பர் போலவே பாதுகாப்பாக வைத்திருங்கள். பொதுவெளியில் அல்லது நம்பகமற்ற வலைத்தளங்களில் பான் கார்டு விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம். உங்களுடைய வங்கி கணக்குகளுக்கான எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் அலர்ட்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் நிதி பாதுகாப்பை முழுமையாகக் காப்பாற்றலாம். எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் அடையாளத்தையும் நிதி நன்மதிப்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.