
சர்வதேசத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த சூழலில் இந்தியாவிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமா என்ற அச்சம் பலரிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவை போதுமான அளவில் இருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளும், எண்ணெய் நிறுவனங்களும் உடனடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி நாட்டில் உள்ள எரிபொருள் இருப்பை மதிப்பீடு செய்துள்ளனர். அடுத்த மாதங்களுக்கும் தேவையான அளவில் பெட்ரோலியப் பொருட்கள் இருப்பதாகவும், இதை நெருக்கடியான சூழ்நிலையில் பயன்படுத்தும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால், சர்வதேச சந்தையில் உள்ள நிலையற்ற தன்மை இந்தியாவில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
ஈரான் நாடு தினசரி 3.3 மில்லியன் பீப்பாய் அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பகுதி சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஒன்றாகும். இருப்பினும், தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எரிபொருள் விநியோகம் தொடரும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது வருடத்திற்கு 257 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 23 சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டுள்ளது. அவசர தேவைகளுக்காக சிறப்பான சேமிப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டாலும், உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய இந்தியா தயார் நிலையில் இருப்பதை மத்திய அமைச்சர் மீண்டும் உறுதி செய்துள்ளார்.