இந்திய நிதித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ஆர். தியாகராஜன். நாட்டின் ஏழை, நடுத்தர மக்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் 1974 ஆம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் உருவானது. இன்று அந்த குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.6,210 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த பெரும் செல்வத்தையும் தியாகராஜன் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், நிறுவன ஊழியர்களுக்கே தானமாக வழங்கியுள்ளார்.

பொருளாதார ரீதியாக நிலை குன்றிய மக்களை உதவ வேண்டும் என்ற எண்ணமே தியாகராஜனின் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது. கடன் வழங்கும் நிறுவனங்கள் மறுத்தவர்களுக்கு உதவி செய்யும் முயற்சியாக அவர் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் டிரக், டிராக்டர் வாங்க கடன் வழங்கியும், சிறிய அளவில் சேமிப்பு திட்டங்களையும் ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் சாதாரண மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தியாகராஜன் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். இன்றும் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள பழைய காரை மட்டுமே பயன்படுத்துகிறார். சொந்த செல்போனே இல்லாதவர்; அது கவனச்சிதறலை ஏற்படுத்தும் என நம்புகிறார். சென்னையில் ஒரு சாதாரண வீட்டில் வாழும் இவர், ஊழியர்களின் நம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் பதிலாக தன் சொத்துக்களை அவர்களுக்காக எழுதி வைத்துள்ளார்.
86 வயதான தியாகராஜன், தன்னலமற்ற மனிதநேயத்தின் அடையாளமாக திகழ்கிறார். “நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டெல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பழமொழி போல, தியாகராஜனின் வாழ்க்கையும் அன்பும் நற்பண்பும் நிரம்பிய ஒன்றாகும். நிதி உலகில் தியாகத்தின் அர்த்தத்தை அவர் தன் செயலால் நிரூபித்துள்ளார்.