சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.34 ஆக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்தமே மாதம் முதலே தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த வாரம் கூட ரூ.70 வரை உயர்ந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் தரத்துக்கு ஏற்ப ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.34 ஆக குறைந்துள்ளது. வெளிச் சந்தைகளில் கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.80, அவரைக்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.40,சாம்பார் வெங்காயம் ரூ.35, கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு தலா ரூ.30, பாகற்காய் ரூ.25, முட்டைகோஸ், முள்ளங்கி, நூக்கல் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கடந்த இரு மாதங்களாக தக்காளி வரத்து குறைவாக இருந்தது. அதனால் அதன் விலை உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.