அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்துள்ளார். ஏற்கனவே 25 சதவீதம் இருந்த வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தி, இந்த முடிவை அவர் அறிவித்தார்.

உக்ரைன்-ரஷ்யா போரை அடுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் வணிகத்தை நிறுத்தின. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ரஷ்யா இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது. இந்திய நிறுவனங்களுக்கு ஒரு பேரலுக்கு 3 முதல் 30 டாலர் வரை தள்ளுபடி கிடைத்தது.
மேலும், டாலரில் செலுத்த தேவையில்லாத சலுகையும் இருந்தது. ப்ளூம்பெர்க் தகவலின்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், மங்களூர் பெட்ரோ கெமிக்கல் ஆகிய அரசு நிறுவனங்கள் 35 சதவீத எண்ணெயை ரஷ்யாவிலிருந்து வாங்குகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனம் தனியார் துறையில் அதிக எண்ணெய் வாங்கி, 27 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. நயாரா எனர்ஜி 17 சதவீதம் வாங்குகிறது. மீதமுள்ள 21 சதவீதத்தை பிற நிறுவனங்கள் வாங்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தினசரி 2 மில்லியன் பேரல் அளவிற்கு இறக்குமதி தொடர்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயில் 38 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வருகிறது. அரசு எந்த நிறுவனத்துக்கும் எண்ணெய் கொள்முதலை குறைக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை. டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியா-அமெரிக்கா வணிக உறவுகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.