சென்னை: யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் தினசரி செய்யப்படும் பண பரிவர்த்தனை வரம்பு முக்கிய மாற்றத்துடன் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) வெளியிட்ட அறிவிப்பின் படி, வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது. புதிய விதிமுறை வரும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.
முன்னதாக, காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீடு, கடன் தவணை, அரசுத் தொகை செலுத்துதல் போன்ற நிறுவனப் பரிவர்த்தனைகளுக்கு UPI வழியாக ஒருநாள் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்ப முடிந்தது. இப்போது அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை செலுத்தும் வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், நகை வாங்கும் பரிவர்த்தனைக்கு முன்பு இருந்த ரூ.1 லட்சம் வரம்பு தற்போது ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிநபர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனுப்பும் UPI பரிவர்த்தனை வரம்பு மாற்றமின்றி ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. அதேபோல், கல்விக் கட்டணம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான வரம்பும் ஏற்கனவே இருந்தபடி ரூ.5 லட்சமாகவே உள்ளது.
இந்த மாற்றம், முதலீடு, காப்பீடு, கடன் போன்ற உயர்தரப் பரிவர்த்தனைகளை சுலபமாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.