இந்தியாவில் தற்போதைய பண பரிவர்த்தனைகள் யுபிஐ (UPI) வழியாகவே பெரும்பாலும் நடைபெறுகின்றன. இது இலவசமாகக் கிடைக்கும் சிறந்த சேவையாக இருந்து வருகிறது. மக்கள் பாதுகாப்பாக, எளிதாக பண பரிவர்த்தனை செய்யும் வழியென்று கருதி இதை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த இலவச சேவைக்கு விரைவில் முடிவுக்காலம் வரப்போகிறது என்ற பயம் தற்போது கிளம்பியுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதுகுறித்து முக்கியமான மற்றும் சூசகமான விளக்கங்களை அளித்துள்ளார்.

சஞ்சய் மல்ஹோத்ரா கூறும்போது, “யுபிஐ சேவைகள் தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் இதை பராமரிக்க வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அரசு தற்போது இதற்கான செலவுகளை ஏற்று வருகிறது. ஆனால் எந்த ஒரு முக்கியமான உள்கட்டமைப்பும் நீடித்துப் செயல்பட வேண்டுமென்றால், அதற்கான செலவுகளை யாராவது சுமக்க வேண்டும். அது யூசர்களாகவோ அல்லது பிறராகவோ இருக்கலாம்” என்றார். இது மூலம் எதிர்காலத்தில் யுபிஐ சேவைக்குத் தேவையான கட்டணத்தை யாராவது செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என்கிறார்கள்.
மேலும், யுபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் யுபிஐ மூலம் 18.39 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ₹24.03 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்தியாவின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% மற்றும் உலகளவில் 50% பரிவர்த்தனைகள் யுபிஐ வழியாக நடைபெறுகிறது. இது இந்தியா சர்வதேச பேமெண்ட் முறைகளில் முன்னணியில் இருப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அரசு கடந்த 2019 டிசம்பரில் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கான MDR கட்டணத்தை நீக்கியது. தற்போது இம்மாதிரி கட்டணத்தை மீண்டும் கொண்டு வந்து, கடைக்காரர்கள் யுபிஐ மூலம் பெறும் பணத்தில் ஒரு சிறிய சதவிகித கட்டணத்தை செலுத்தும் நிலை உருவாகலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராதபோதிலும், ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த கூற்று முக்கியமான மாற்றத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.