சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சாதனை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா வெளியிட்ட சமீபத்திய பணவீக்கம் தொடர்பான டேட்டா உலக சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் என்பது ஒரு பொருளாதார முதலீட்டாக மட்டும் இல்லாமல், கலாச்சாரத்துடன் பிணைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. குழந்தை பிறப்பு முதல் திருமணம் வரை தங்கம் முக்கிய இடம் பெறுகிறது. அதனால் தங்க விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்களுக்கே கடும் சுமை ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,240க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்த ஆகஸ்ட் மாத பணவீக்கம் 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாத 2.7 சதவீதத்தை விட அதிகமாகும். கோர் பணவீக்கம் கூட 3.1 சதவீதம் வரை சென்றுள்ளது. இத்தகவல்கள் வெளியாகியதும் தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. பணவீக்கம் அதிகரித்தால் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகக் கருதப்படும் என்பதால் தேவை கூடுகிறது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைவதும், வேலையின்மை சதவீதம் அதிகரித்ததும், பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைக்க வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர். வட்டி விகிதம் குறைந்தால் தங்கத்தின் விலை மேலும் உயரும். இதனுடன் உலகளாவிய அரசியல் பதற்றங்களும் விலையை மேலே தள்ளுகின்றன. வரவிருக்கும் நாட்களில் தங்கம் புதிய உச்சத்தைத் தொடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.