உத்தரப் பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த விக்ரம் சோப்ரா, பழைய கார் விற்பனை உலகில் மிகப்பெரிய பெயராக உயர்ந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஐஐடி பாம்பேயில் பொறியியல் படித்து முடித்த அவர், மெக்கின்சியில் அனலிஸ்டாக தனது தொழில் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சீக்வோயா கேபிட்டலில் முதலீட்டு ஆய்வாளராக பணிபுரிந்தார்.

2012-ஆம் ஆண்டு வீட்டு அலங்கார ஸ்டார்ட்அப் FabFurnish தொடங்கிய அவர், மூன்று வருட போராட்டத்திற்குப் பிறகும் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த தோல்வியால் மனம் தளராமல், இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் உள்ள இடைவெளியை கவனித்து, 2015-ல் Cars24 நிறுவனத்தைத் தொடங்கினார்.
அந்தக் காலத்தில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்ய முகவர்களை பெரிதும் நம்ப வேண்டிய நிலை இருந்தது. இதற்கு மாற்றாக, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தை உருவாக்கினார். Cars24 மூலம் மக்கள் தங்கள் கார்கள் எளிதில், விரைவாக, சரிபார்க்கப்பட்ட வாங்குபவர்களுக்கு விற்கும் வாய்ப்பு பெற்றனர்.
விரைவான பணம் செலுத்துதல், தொந்தரவு இல்லாத ஆவண பரிமாற்றம், துல்லியமான கார் மதிப்பீடு ஆகியவற்றால் மக்கள் நம்பிக்கையை பெற்றார். நிறுவனம் முதல் ஆண்டிலேயே ரூ.32 கோடி முதலீடு பெற்று டெல்லி, மும்பை, பெங்களூருக்கு விரிந்தது.
2018-ல் ரூ.340 கோடி முதலீடு பெற்றதால் நிறுவன மதிப்பு ரூ.1,740 கோடியாக உயர்ந்தது. OLX, Droom போன்ற போட்டியாளர்களிடையே Cars24 தனித்தன்மையை நிரூபித்தது. வீடு வாசலிலேயே சேவை, டீலர்களுக்கான ஏலம் போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று இந்தியாவின் பயன்படுத்திய கார் சந்தை ரூ.28,000 கோடி மதிப்பை எட்டியதற்கு Cars24 முக்கிய பங்கை வகிக்கிறது. மகேந்திர சிங் தோனி, இந்த நிறுவனத்தின் பிராண்ட் தூதராக இருந்து அதனை மக்களிடம் கொண்டு சென்றார்.
Cars24 இந்தியாவைத் தாண்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் விரிந்துள்ளது. ஆண்டுதோறும் 1.5 லட்சம் கார்கள் விற்பனை செய்து, ரூ.2,270 கோடி வருவாய் ஈட்டுகிறது.
15 மில்லியனுக்கும் மேற்பட்ட செயலி பதிவிறக்கங்கள், 200 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கிளைகள், மாதம் 2 லட்சத்திற்கும் அதிக பரிவர்த்தனைகள் மூலம் Cars24, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட கார் சந்தையில் 65% பங்கைக் கொண்டுள்ளது.
ஒரு தோல்வியால் நிற்காமல், அடுத்த முயற்சியில் வெற்றி பெற்று, இன்றோடு ரூ.28,000 கோடி பேரரசை நடத்தும் விக்ரம் சோப்ரா, இந்திய ஸ்டார்ட்அப் உலகில் முன்னணி சிகரமாக உயர்ந்துள்ளார்.