சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் அடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
ஒரு கிராம் ரூ.275 அதிகரித்து ரூ.9,290 ஆகவும், ஒரு பவுன் ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320 ஆகவும் இருந்தது. இதேபோல், 24 காரட் தூய தங்கம் ரூ.81,072-க்கு விற்பனை செய்யப்பட்டது. நகை வியாபாரிகள் கூறியதாவது:- அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அறிவித்ததில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி நகை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அந்த யோசனையை தள்ளி வைத்துள்ளனர். விலை குறைந்த பின் வாங்கலாம் என நினைப்பதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பவர்கள் மட்டுமே தற்போது குறைந்த அளவில் நகைகளை வாங்குகின்றனர். வரும் 30-ம் தேதி அட்சய திருதியையை முன்னிட்டு பலர் தங்கம் வாங்க முன்பதிவு செய்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்துள்ளதால், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு கூறினார்கள். அதே சமயம் வெள்ளியின் விலை நேற்று மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 111 ரூபாய் விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 1,11,000 ஆக இருந்தது.