இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் women investors முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளனர். அனராக் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, 70%க்கும் மேற்பட்ட பெண்கள், சொந்த வீடு என்பது முக்கிய முதலீட்டு வாய்ப்பாகவே கருதுகின்றனர். அவர்களில் பலர் 90 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொகுசு வீடுகளில் முதலீடு செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பெண்கள் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

வீட்டுக் கடன்கள், பெண்களுக்கு நீண்டகால நிதி ஆதரவாக இருப்பதுடன், குறைந்த வட்டி விகிதங்கள், வரிச்சலுகைகள் மற்றும் ஸ்டாம்ப் டூட்டி தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. ஒரு பெண் கடன் வாங்கும் பொழுது, அவருக்கான வட்டி விகிதம் பொதுவாக 0.05% முதல் 0.10% வரை குறைவாக இருக்கும். இந்த சிறு விகித வேறுபாடே, 20 ஆண்டுகளுக்கான ₹50 லட்சம் கடனில் ₹1 லட்சம் வரை வட்டிச்சலுகையாக மாறும். இது, அவர்களின் பண செலவுகளை கணிசமாக குறைக்கும்.
மேலும், பெண்களுக்கு வீட்டு கடனுக்கான தகுதிகள் பெற மிகவும் எளிதாக உள்ளது. 21 வயதுக்கு மேற்பட்டவையாகவும், நிலையான வருமானம் மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களாகவும் இருந்தால் அதிக கடன் தொகையைப் பெற முடியும். அதோடு, சொத்து பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்படும் பட்சத்தில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் 1% முதல் 2% வரை ஸ்டாம்ப் டூட்டி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் தங்களுக்கே சொந்தமான வீட்டை வாங்கும் முனைப்புடன் முன்னேறி வருகின்றனர்.
அத்துடன், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மற்றும் அஃபோர்டபிள் ஹவுசிங் ஃபண்டு (AHF) போன்ற திட்டங்கள், முதன்முறையாக வீடு வாங்கும் மற்றும் குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கு 3%-6.5% வரை வட்டி மானியங்களை வழங்குகின்றன. இந்த வகை சலுகைகளைப் பெற, அடையாள சான்றுகள், சொத்து ஆவணங்கள், வருமான சான்றுகள் ஆகியவை முழுமையாக மற்றும் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தால், கடனுக்கான நடைமுறை விரைவாகவும், சிக்கலற்றதாகவும் அமையும்.