பாட்னா: தொழிலதிபர் கோபால் கெம்கா வெள்ளிக்கிழமை இரவு பீகாரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைக் கண்டித்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆளும் ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசை விமர்சித்துள்ளார். “பீகாரை ஆளும் பாஜக-நிதிஷ் குமார் கூட்டணி பீகாரை நாட்டின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளது. தொழிலதிபர் கோபால் கெம்காவின் வெளிப்படையான துப்பாக்கிச் சூடு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
பீகாரில் கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற குற்றங்கள் சாதாரணமாகிவிட்டன. ஆளும் அரசு இவற்றைத் தடுக்க முற்றிலும் தவறிவிட்டது. பீகாரில் வசிக்கும் சகோதர சகோதரிகளே, இதுபோன்ற அநீதிகளை நாம் தொடர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டுமா? உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத இந்த ஆட்சியாளர்களுடன் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்குமா?

கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற ஒவ்வொரு குற்றமும் மாற்றத்திற்கான கூக்குரல். அச்சமற்ற மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகரக்கூடிய ஒரு புதிய பீகாருக்கான நேரம் இது. இந்தத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்ல, பீகாரின் பாதுகாப்பிற்காகவும் இருக்கும்,” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ்-தள பதிவில் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 243 சட்டமன்ற இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பிரிவு) கூட்டணியாகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் போட்டியிடுகின்றன.