சென்னை: பெண்களுடன் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம், அதற்காக மாதம் 5000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என கூறி டெலிகிராம் ஆப் மூலம் சென்னைக்கு வேலை தேடி வந்த இளைஞரை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. சிறிய தொகைக்காக ஆசைப்பட, இறுதியில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த அந்த இளைஞர் ஆவடி காவல் ஆணையகத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டேட்டிங் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கும்பல்கள் சபல பேர்வழிகளை குறிவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அந்த வரிசையில், ‘கால் பாய்’ வேலை என்கிற பெயரில் நடைபெறும் மோசடி, தற்போது சென்னையில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நல்ல சம்பளமுள்ள வேலை தேடி சென்னைக்கு வந்தார். அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் தங்கி இருந்த அவர், சமூக வலைதளங்கள் மற்றும் ஆப் வழியாக பகுதி நேர வேலை தேடியுள்ளார். அப்போது, டெலிகிராம் குழுவில் “பெண்களுடன் நேரம் செலவிட்டால் 5000 ரூபாய் வழங்கப்படும்” என்ற தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலை நம்பிய அவர், கும்பலின் வழிகாட்டுதலின்படி சில ‘ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம்’ மற்றும் ‘சர்வீஸ் சார்ஜ்’ எனும் பெயரில் ஆன்லைன் வழியாக பணம் அனுப்பினார். தொடர்ந்து, பெண்களை சந்திக்க வேண்டிய முகவரி தரப்படும் என கூறி, மீண்டும் மீண்டும் பல ஆயிரம் ரூபாயை கேட்டு மோசடி செய்துள்ளனர். இறுதியில், எந்த வேலைவும் கிடைக்காமல், பணமும் போய், ஏமாற்றம் உணர்ந்த அவர், போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தடயவியல் நுட்பத்தின் மூலம் தேடி வருகின்றனர். பொதுமக்கள், இதுபோன்ற கால் பாய், டேட்டிங், அல்லது எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என கூறும் விளம்பரங்களை நம்பாமல் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.