வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்று அழைக்கப்படும் இந்த மூலிகை தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது பரவலாகக் களைச் செடியாக அறியப்படுகிறது. இது அமெரிக்காவைச் சேர்ந்த தாவரம் என்றாலும், இது உலகளாவிய வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ளது.
இதனை தமிழில் வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான், கிணற்றுப்பாசான், வெட்டுக்காயபச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்ததிப்பூண்டு, காயப்பச்சில்லை மற்றும் தென்தமிழகத்தில் பேச்சு வழக்கில் தாத்தாப்பூச்செடி என்று அழைக்கப்படுகின்றன. குழந்தைகள் இதன் பூவை நீண்ட காம்புடன் கொய்து தாத்தா தாத்தா தல குடு என்று சொல்லியபடி கிள்ளி விளையாடுவார்கள்.
மருத்துவ பயன்கள்
இந்தச் செடியின் இலைகளை வெட்டுக் காயங்களுக்கு கிராமப்புறங்களில் மருந்தாகப் பயன்படுத்துவர்.
இது புண்ணாற்றும், குறுதியடக்கி, கபநிவாரணியாகும்.
மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதி முதலியவை குணமாகும்.
இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும். தழும்புகளை ஏற்படுத்தாது.
பல ஆண்டுகளாக ஆறாமல் இருக்கும் புண்களை இந்த இலைகளை அரைத்து பற்று போடும் போது வெள்ளை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி விரைவில் ஆற்றும் குணமுடையது.
கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் ஆலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.