ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 31, கேப்டன் சூரியகுமார் 29, தீபக் சஹர் 28* ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னை அணிக்கு சிவம் துபே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் கேப்டன் ருதுராஜ் அதிரடியாக 53 (26) ரன்கள் குவித்து நல்லத் துவக்கத்தை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 65* (45) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். இதனால், சென்னை 19.1 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து முதல் வெற்றியை பதிவு செய்து தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. மறுபுறம் மும்பை அணிக்கு அதிகபட்சமாக விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் எடுத்தும், தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி மும்பை அணிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கினார். 2018 முதல் 2024 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி மூன்று கோப்பைகளை வெல்ல உதவிய அவர், இம்முறை ஏலத்தில் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், சென்னை அணியுடனான நட்பை மறக்காத அவர், ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தபோது அருகில் சென்று, “கமான் ஜடேஜா, கமான் ஜடேஜா” என கைதட்டி ஜாலியாக ஊக்குவித்தார்.
அதற்குப் பதிலடி அளித்த ஜடேஜா, தனது பேட்டால் சஹர் தலையில் அடிக்க போவதுபோல் நடித்து உடனே நிறுத்தி, ஜாலியான பதிலடி கொடுத்தார். இதற்குப் பிறகு, தோனி பேட்டிங் செய்ய வந்தபோது, சஹர் மீண்டும் அருகே சென்று, “கமான் தல, கமான் தல” என கைதட்டி ஊக்குவித்தார். ஆனால், தோனி எந்தவித ரியாக்ஷனும் அளிக்காமல் அமைதியாக இருந்தார்.
போட்டியின் முடிவில், மும்பை அணிக்காக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய சவாலைக் கொடுத்த இளம் வீரர் விக்னேஷ் புதூரை தோனி பாராட்டினார். போட்டிக்குப் பிறகு, அவர் விக்னேஷ் புதூரின் தோளில் தட்டிக் கொடுத்து, அவரது சிறப்பான பந்துவீச்சுக்கு பாராட்டு தெரிவித்தார். அந்த பாராட்டால் விக்னேஷ் நெகிழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியால் சென்னை அணி தொடரை துடிப்பாகத் தொடங்கியது. ரசிகர்கள் இந்த ஜாலியான தருணங்களையும், வீரர்களின் நட்பையும் ரசித்துக் கொண்டாடினர்.