நாகர்கோவில்: குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். போக்ஸோ புகார்களை தாமதமின்றி உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்தார்.
போக்சோ குற்றவாளிகளை விரைவில் கைது செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மாலை மற்றும் இரவு நேர ரோந்து பணியை மேற்கொண்டு குற்றச்செயல்களை தடுக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதிலும், திருடப்பட்ட பொருட்களை மீட்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீதிமன்ற வாரண்ட்களை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
போலீஸ் விசாரணை நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் *e shakshya* செயலியில் பதிவேற்றப்படும், இது விரைவில் நீதிமன்ற விசாரணைகளுக்கு பயன்படுத்தப்படும். அதன் செயல்பாடுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விசாரணை நடைமுறைகளில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளை பாராட்டினார்.
அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதேபோல், குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு உதவிய அரசு வழக்கறிஞர்களுக்கும், சட்ட ஆலோசனை வழங்குவதில் திறம்பட பணியாற்றிய மாவட்ட காவல் அலுவலக சட்ட ஆலோசகர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக போலீஸ் வாகனங்களை எஸ்.பி.சுந்தரவதனம் ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற விருப்பமுள்ள 35 காவலர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தையும் சுந்தரவதனம் வழங்கினார்.