டெல்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார்.
இதேபோல், நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத் தொகுப்பு குடியிருப்புகளையும் தொடங்கி வைக்கிறார்.
துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்படும் மூன்று புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் சூரஜ்மல் விஹாரில் கல்வி வளாகம், துவாரகாவில் கல்வி வளாகம் மற்றும் நஜாஃப்கரின் ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரி ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டங்கள், டெல்லி மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.