லண்டன்: அமெரிக்காவின் பிரபல பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில், புற்றுநோயை ஏற்படுத்தும் “ஆஸ்பெஸ்டாஸ்” துகள்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனில் அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கானோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இயற்கையாகக் கிடைக்கும் “டால்க்” கனிமத்திலிருந்து தயாரிக்கப்படும் பவுடரில், அருகிலுள்ள “ஆஸ்பெஸ்டாஸ்” படிமங்கள் கலந்து விடும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1960களிலேயே ஜான்சன் பவுடரில் இந்த துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் எச்சரிக்கை விடுக்காமல் தயாரிப்பை தொடர்ந்து விற்பனை செய்ததாக வழக்குத் தொடர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வழக்கில் சுமார் 3,000 பிரிட்டனியர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதேபோல் அமெரிக்காவில் 67,000க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தங்களது தயாரிப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை என்றும் விதிமுறைகளைப் பூர்த்தி செய்தவையாகும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
சட்ட நெருக்கடிகள் காரணமாக, 2020ல் அமெரிக்காவிலும், 2023ல் பிரிட்டனிலும் டால்க் அடிப்படையிலான பவுடர் விற்பனையை நிறுத்திய நிறுவனம், தற்போது சோளமாவு அடிப்படையிலான புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு, உலகளாவிய அளவில் ஜான்சன் தயாரிப்புகள் மீதான நம்பிக்கையை மீண்டும் சோதனையிட்டிருக்கிறது.