உலகத்தை உலுக்கிய உக்ரைன்-ரஷ்யா போரின் மூன்றாவது ஆண்டு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய ராணுவ உதவியை வழங்கியுள்ளது. லண்டன் நகரில் இருந்து வந்த செய்தி படி, உக்ரைனுக்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச நிதியத்தின் மூலம் ரூ.5,000 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிதி, பெரும்பாலும் ராணுவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய பங்கு வகித்துள்ள பிரிட்டன், தனியாகவே ரூ.3,500 கோடியை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள தொகையை நார்வே வழங்கியுள்ளது.
போரில் உக்ரைன் நிலத்தை கைப்பற்றியிருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக, அந்த நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நேரடி அழுத்தமாக அமையும் எனவும் பிரிட்டன் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
இந்த நிதியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான டிரோன்கள், டாங்கிக்கு எதிரான பாதுகாப்பு உபகரணங்கள், ராணுவ வாகனங்களுக்கான பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாலும், உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாலும், ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
உக்ரைன் ராணுவம், இந்த உதவியின் மூலம் ரஷ்ய தாக்குதல்களுக்கு இன்னும் வலுவாக எதிரொலிக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த திட்டம், அடுத்த கட்ட ராணுவ நடவடிக்கைகளில் உக்ரைன் சக்தியை பெரிதும் உயர்த்தும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் தலைமையிலான இந்த உதவி, உக்ரைனின் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.