ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்ப கடற்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதோடு, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளின் பொருட்கள், விளக்குகள் குலுங்கிய காட்சிகளும், நிறுத்தப்பட்ட வாகனங்கள் சாலையில் அசைந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்ததாவது, நிலநடுக்கம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. தொடர் பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதன் தாக்கத்தால் கடலில் சீற்றம் அதிகரித்தது. அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அபாயகரமான அலைகள் எழக்கூடும் என எச்சரித்தது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆபத்து கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ், “இங்கு அதிகாலை பயங்கர அதிர்வு உணரப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை சேதம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
கம்சட்கா தீபகற்பம், பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையத்தில் அமைந்ததால் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் பகுதியாகும். கடந்த ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கியது. அதேபோல், 2011-ம் ஆண்டு ஜப்பானின் புகுஷிமாவில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது உலகை உலுக்கியது. தற்போது மீண்டும் அப்பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.