ஜப்பானின் சப்போரோவில் வசிக்கும் 80 வயது பெண் ஒருவர், தன்னை விண்வெளி வீரர் எனக் கூறிய நபரால் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகியுள்ளார். சமூக ஊடகங்களில் அவரை சந்தித்த அந்த நபர், “நான் விண்கலத்தில் சிக்கிக் கொண்டுள்ளேன், ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது, உயிர் பிழைக்க பணம் தேவை” எனக் கூறி நம்ப வைத்துள்ளார். அந்தப் பெண், அவசரநிலையென நினைத்து, 10 லட்சம் யென் (சுமார் ரூ.6 லட்சம்) கிரிப்டோகரன்சியாக அனுப்பியுள்ளார்.

முதலில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ எனப்படும் வாட்ஸ்அப் மோசடிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் அதைவிட வினோதமாக இருந்தது. விண்வெளியில் சிக்கித் தவிக்கும் கதையை நம்பிய அந்த பெண், குறுகிய காலத்தில் பெரும் தொகையை இழந்துவிட்டார். பின்னர் தான் இது ஒரு சைபர் மோசடி என்பதும், தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதும் தெரிந்தது.
விசாரணையில், சமூக ஊடகங்களில் நடந்த உரையாடல்களின் மூலம் அந்தப் பெண் அந்த நபரிடம் உணர்ச்சிவசப்பட, அவரிடம் நெருக்கம் அதிகரித்தது தெரிய வந்துள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பலரும் இந்தச் செய்தியைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “இது வெளிப்படையாக நகைச்சுவையாகத் தோன்றினாலும், உண்மையில் பலர் இப்படிப்பட்ட மோசடிகளுக்குப் பலியாகின்றனர்” என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், ஆன்லைனில் அந்நியர்களுடன் தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.