வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போப்பின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவராக போப் போற்றப்படுகிறார்.
மார்ச் 13, 2013 அன்று பிரான்சிஸ் 266-வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில வருடங்களைப் போலவே, பிரான்சிஸ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் தேவாலயப் பணிகளைத் தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 38 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு, மார்ச் 23-ம் தேதி வாடிகன் திரும்பினார்.

முதுமை காரணமாக மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கடந்த 14-ம் தேதி போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான சுவாச பிரச்சனை, சுவாசக்குழாய் தொற்று மற்றும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்களிடம் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வாடிகன் இல்லம் திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆசீர்வதித்தார்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு மறுநாள் (‘ஈஸ்டர் மண்டே’) நேற்று காலை 7.35 மணிக்கு வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. போப்பின் மரணத்தை உறுதி செய்து, வாடிகன் நிர்வாகி கார்டினல் கெவின் பெரெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரோம் பிஷப் பிரான்சிஸ் காலை 7.35 மணிக்கு தந்தையின் இல்லம் திரும்பினார். அவர் தனது முழு வாழ்க்கையையும் கடவுளுக்கும் அவருடைய தேவாலயங்களுக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார். விசுவாசம், தைரியம், உலகளாவிய அன்புடன், குறிப்பாக ஏழைகளின் முன்னேற்றத்திற்காக நற்செய்தி கூறுவது போல் வாழ அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடருக்கு முன்மாதிரியாக இருந்தார்.
அந்த நன்றியுணர்வோடு போப் பிரான்சிஸ் அவர்கள், ‘அவரது ஆன்மாவை கடவுளின் எல்லையற்ற மற்றும் இரக்கமுள்ள அன்பில் ஒப்படைக்கிறோம்’ என்று கூறினார். இதைத் தொடர்ந்து, போப் இறந்த செய்தியை, உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு கார்டினல் கெவின் முறைப்படி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன. போப்பின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரான்சிஸ் டிசம்பர் 17, 1936 அன்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்தார். அவரது உண்மையான பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. கார்டினல் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தார்.
2013-ல் போப் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 1,200 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் அல்லாத போப் என்ற பெருமையைப் பெற்றார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது பதவிக்காலத்தில் இரக்கம், உள்ளடக்கம், பணிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது ஆழ்ந்த அக்கறையுடன் பணியாற்றியுள்ளார். வத்திக்கானில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். நிதி விவகாரங்கள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். மதகுருக்களின் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார்.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். வழக்கமாக, போப் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, வத்திக்கானின் நிர்வாகப் பொறுப்பை கர்தினால்கள் சபை எடுத்துக் கொள்ளும். அதன்படி, தற்போது வாடிகனின் நிர்வாகப் பொறுப்பை கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் போப்பின் இறுதிச்சடங்குகள் மற்றும் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்வார்கள்.
போப் இறந்ததில் இருந்து புதிய போப் தேர்ந்தெடுக்கும் வரை வாடிகன் இடைக்கால நிர்வாகத்தில் (Interregnum) இருக்கும். போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து, வத்திக்கானில் அவர் வசித்து வந்த குடியிருப்பு பூட்டப்பட்டது. தேவாலயங்களில் ஒன்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. போப்பின் இறுதிச் சடங்குகள் 4 முதல் 6 நாட்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸ் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.