புளோரிடா: தனது மாமாவின் எலும்புக்கூட்டை வைத்து கிடார் தயாரித்துள்ளார் புளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ்.
புளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ். இவர் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா பிலிப் கடந்த 1996-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது எலும்பு கூடு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
20 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் கல்வி நோக்கங்களுக்காக எலும்புகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால் அந்த எலும்பு கூட்டை திருப்பி அனுப்ப வேண்டியது இருந்தது. இதனால் பிரின்ஸ் தனது மாமா பிலிப்பின் எலும்பு கூட்டை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றார்.
பின்னர் அந்த எலும்பை வைத்து ஒரு கிட்டாரை வடிவமைக்க முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் உதவியுடன் கிட்டார் வடிவமைக்கப்பட்டது. ஒரு உலோக கம்பியை எலும்புக்கூட்டில் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டார் வடிவமைத்தனர்.
இந்த எலும்பு கிட்டார் தனது மாமாவின் இனிய நினைவாக எப்போதும் செயல்படும் என்று பிரின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் இந்த கிட்டாரை வாசிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.