மாஸ்கோ: இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யா தயாரித்த எஸ்-400, உலகின் மிக முன்னணி வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படுகிறது. 600 கிமீ தொலைவில் இருந்து வரும் எதிரி ஏவுகணைகளை கண்டறிந்து, 400 கிமீ தூரத்திலேயே இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததில், இந்த அமைப்பின் சக்தி வெளிப்பட்டது. இதனால் இந்தியா இந்த அமைப்பை “சுதர்சன சக்கரம்” என அழைக்கத் தொடங்கியது.

ஏற்கனவே 5 எஸ்-400 அமைப்புகளை வாங்க இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது. அதில் 3 அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் உக்ரைன் போரின் காரணமாக மீதமுள்ள 2 அமைப்புகளின் விநியோகம் தாமதமடைந்துள்ளது. இதனிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைத் தொடர்ந்து, கூடுதலான எஸ்-400 அமைப்புகளை இந்தியா பெற விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தங்களில் ரஷ்யா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36 சதவீதம் என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல் குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில், கூடுதல் எஸ்-400 அமைப்புகள் இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.