ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் 2021ஆம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 56 சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில், 16 விமானங்களை ஸ்பெயினில் ஏர்பஸ் நிறுவனம் நேரடியாக தயாரித்து வழங்கும். மீதமுள்ள 40 விமானங்களை இந்தியாவில் உள்ள வதோதரா நகரில் டாடா ஆலையில் உருவாக்க திட்டமிடப்பட்டது.

இந்த விமானங்கள் 11 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டவை. ஒரே நேரத்தில் 70 வீரர்கள் மற்றும் எட்டு டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும், வான்வழி கண்காணிப்பு, உளவு சேகரிப்பு போன்ற பணிகளுக்காக அவை அதிநவீன உபகரணங்களுடன் இருக்கின்றன.
முதல் சி-295 விமானம் 2023ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, இறுதி 16வது விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதை ராணுவ அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது திட்டமிடப்பட்ட நேரத்தைவிட இரண்டு மாதங்கள் முன்னதாகவே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு மிகுந்த வலிமையையும், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமும் அளிக்கிறது. இந்த விமான ஒப்பந்தம், உற்பத்தித் திறனிலும், தொழில்நுட்ப மாற்றத்திலும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.