மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் அலாஸ்காவில் சந்தித்து, உக்ரைன் போர் குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் எந்த தீர்வும் எட்டப்படாததால், போர் அடுத்து எங்கு செல்கிறது என்ற கேள்வியும், இந்தியா மீண்டும் கூடுதல் வரி சுமையால் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ரஷ்யா – அமெரிக்கா உறவு எப்போதும் பதட்டமானதே. டிரம்ப் அதிகாரத்தில் இருக்கும் போது எதிரி நாடுகளின் தலைவர்களுடன் திடீர் சந்திப்புகளை நடத்துவது வழக்கம். வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்ததும் அதற்கு உதாரணம். ஆனால் அதிலிருந்து பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதேபோல் புதினுடன் சமீபத்திய சந்திப்பும் பலனின்றி முடிந்துள்ளது.
அங்கோரேஜ் நகரில் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் தலா மூன்று பேர் பங்கேற்றனர். முன்னேற்றம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறினாலும், எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. “பல விஷயங்களில் ஒப்புதல் கிடைத்தது, ஆனால் சில முக்கிய அம்சங்களில் இன்னும் தீர்வு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிவின்றி போனதால், அமெரிக்கா இந்தியாவுக்கு மீண்டும் கூடுதல் வரி விதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்பதற்காக 50% வரி விதிக்கப்பட்டது. இப்போது அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய பொருட்களை புறக்கணித்தாலும், இன்னும் சில நாடுகள் மறைமுகமாக ரஷ்ய எரிபொருளை வாங்கி வருகின்றன. இந்தியா நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் ரஷ்யாவின் பொருளாதாரம் தாங்கி நிற்கிறது. அமெரிக்க எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத இந்தியா, விலை உயர்வைத் தவிர்க்க எண்ணெய் கொள்முதலைத் தொடர்கிறது. வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்க்க விரும்புவதால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை எனத் தெரிகிறது.