பீஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளார். இதை நியாயமற்றதாக இந்திய அரசு கண்டித்துள்ளது. தேசிய நலனை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் சீனாவுக்கும் அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் பலரும் டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லின் ஜியன், இந்தியாவும் சீனாவும் முக்கிய வளரும் நாடுகள் எனக் கூறினார். இரு நாடுகளும் ஒத்துழைத்தால் பரஸ்பர நன்மை கிடைக்கும் என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார். இதனால், இந்தியா-சீனா உறவுகள் நல்ல வளர்ச்சியை அடையும் வாய்ப்பு உள்ளது.