நியூயார்க்: பிரபல அமெரிக்க இணைய வணிக நிறுவனம் அமேசான், தனது முதல் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியது. இது, எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ இணையதள சேவைக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், அமேசானின் துணை நிறுவனமான புளூ ஆரிஜின் மூலம் ‘புராஜக்ட் குய்பெர்’ என்ற பெயரில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவரலில் உள்ள ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் இருந்து ‘யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் 5’ ராக்கெட்டின் உதவியுடன் 27 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இதன் மூலம் அமேசான் தனது செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்தது.
அமேசான் நிறுவனம், குறைந்த செலவில் மற்றும் வேகமான இணைய சேவையை வழங்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், புளூ ஆரிஜின் நிறுவனம் 3,200 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. திட்டம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த ஆண்டின் இறுதிக்குள் செயற்கைக்கோள் வாயிலாக இணைய சேவையை வழங்க அமேசான் தயாராக உள்ளது.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், 2019 முதல் 8,000 செயற்கைக்கோள்கள் மூலம் உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்கி வருகிறது. இதற்குப் போட்டியாக, அமேசானின் புராஜக்ட் குய்பெர் திட்டம், யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயற்கைக்கோள்களை ஏவ தொடர்ந்து செயல்படவுள்ளது.
இந்த முயற்சி உலகளாவிய இணையச் சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்று பார்க்க வேண்டும்.