பாரிஸ்: இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் இராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்தை அங்கீகரித்தது. காசா பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களால் கடுமையான பேரழிவை எதிர்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில், காசாவின் முக்கியப் பகுதியான காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் ஒரு பேரழிவாகும். இந்தப் போர் நிரந்தர போர்நிறுத்தத்துடன் முடிவடைய வேண்டும். காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் முன்னோடியில்லாத பேரழிவு மற்றும் நிரந்தரப் போருக்கு வழி வகுக்கும்.

இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காசாவைப் பாதுகாக்க ஐ.நா. ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கான ஒரு கட்டமைப்பை காசாவில் நிறுவ வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். ஐ.நா.வால் முன்மொழியப்பட்ட இந்த அமைப்பு காசாவைப் பாதுகாப்பது, அப்பாவி மக்களைப் பாதுகாப்பது மற்றும் பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
பிரான்ஸ் கடந்த மாதம் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்தது. இதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டில் இம்மானுவேல் மக்ரோன் தனது உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். காசா ஆக்கிரமிப்பை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகரித்ததற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேல் தனது படைகளை நியாயமான முறையில் பயன்படுத்துகிறது.
ஹமாஸின் தோல்வியை முழுமையாக்குவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. காசாவின் சுமார் 75% இஸ்ரேலிய கட்டுப்பாட்டில், இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. காசா நகரம், மற்றொன்று அல்-மவாசியில் உள்ள மத்திய முகாம் பகுதி” என்றார்.