புளோரிடா: டிரம்பின் விசுவாசியான மைக் வால்ட்ஸ் சீனாவின் தீவிர விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், புதிய அரசில் சிலரை முக்கிய பதவிகளில் நியமிக்க டிரம்ப் முடிவு செய்து வருகிறார்.
முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை அவர் நியமித்தது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 67 வயதான சூசி வைல்ஸ் 1979-ம் ஆண்டு அமெரிக்க அரசியல் ஆலோசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1980-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ரீகனுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.
அரசியல் ஆலோசகராக பல்வேறு பணிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பின் பிரச்சாரம் மற்றும் பரப்புரை உத்திகளை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். இந்நிலையில்தான் வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சுசி வைல்ஸை டிரம்ப் நியமித்தார். யார் இந்த மைக் வால்ட்ஸ்? அந்த வரிசையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக் வால்ட்ஸ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளர். அவர் சீனாவின் தீவிர விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக் வால்ட்ஸ், அறிவுசார் சொத்து திருட்டு, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அமெரிக்க விநியோகச் சங்கிலி பாதிப்புகளை சுரண்டுதல் உள்ளிட்ட சீனாவின் பொருளாதார நடைமுறைகளை விமர்சித்துள்ளார். சீன உற்பத்தியில் அமெரிக்கா சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து வாதிடுகிறார்.