சியோல்: கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக, ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்நாட்டின் 63 வயதான அதிபர் யூன் சுக்-யோல், சமீபத்தில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சில மணி நேரங்களிலேயே அவசரநிலைப் பிரகடனத்தை வாபஸ் பெற்றார். இதனிடையே ராணுவ சட்டத்தை அறிவித்த யூன் சுக்-யோலை பதவி நீக்கம் செய்யக்கோரி தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட யூன் சுக்-யோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. பதவியில் இருக்கும் போது கிரிமினல் வழக்குகளில் இருந்து அவருக்கு சிறப்பு விலக்கு இருந்தாலும், கிளர்ச்சி அல்லது தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு அது பொருந்தாது.
யூன் சுக்-யோலின் வழக்கறிஞர் யூன் கப்-கியூன் கூறியதாவது: கைது வாரண்ட் சட்டவிரோதமானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார்.
அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, பிரதமர் ஹான் டக் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். நிதியமைச்சர் சோய் சாங்-மாக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.