வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத், கட்டிய லுங்கியுடன் தாய்லாந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார்.

இந்நிலையில், இடைக்கால அரசாக பொறுப்பேற்ற முகமது யூனுஸ் தலைமையிலான நிர்வாகம் அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்துள்ளது. பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அப்துல் ஹமீதும் தப்பிச் சென்றார். அவர் டாக்கா விமான நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு வந்ததாகவும், தாய்லாந்துக்கு விமானம் மூலம் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். விசாரணைக்காக உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.ஆனால் அரசியல் எதிரிகள், அவர் சட்டத்திலிருந்து தப்பி ஓடியதாக குற்றம்சாட்டுகின்றனர். சிசிடிவி காட்சியில் லுங்கி கட்டிய நிலையில் சக்கர நாற்காலியில் செல்லும் அப்துல் ஹமீத் படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
இவரது தப்பிப்பை அரசியல் விவகாரமாக பல தரப்புகள் விமர்சிக்கின்றன. மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த தப்பிச் செல்வதற்கான திட்டம் முன்கூட்டியே வகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் அதிபரின் தப்பும், நாட்டின் அரசியல் நிலைமையையும் இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில், வங்கதேசத்தின் எதிர்காலத்திற்கான அரசியல் மாற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.