பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர வலதுசாரி தலைவர் டாமி ராபின்சன் தலைமையில் “யுனைட் தி கிங்டம்” என்ற பேரணி லண்டனில் நடைபெற்றது. இதில் 1.50 லட்சம் பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டதில் 26 போலீசார் காயமடைந்தனர். மேலும், 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், இன ரீதியான மிரட்டல்களை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று வலியுறுத்தினார். பிரிட்டன் சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, மரியாதை ஆகிய அடிப்படைகளில் உருவான நாடு என்றும், அமைதியான போராட்டம் மக்களின் உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் போலீசாரை தாக்குவது, அவர்களின் பணியைத் தடுக்குவது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார். நமது நாட்டின் கொடி பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அது மதிப்பு மற்றும் மரியாதைக்கான அடையாளம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகள் பிரிட்டனின் சமூக சூழ்நிலையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. குடியேற்றம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இனவெறி எதிர்ப்பு குறித்து அரசின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.