புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “இந்தியாவில் வாழும் சீக்கியர்கள் தங்கள் மதச் சின்னமான தலைப்பாகையை அணிய போராட வேண்டும்.
இந்த பிரச்சனை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது,” என்றார். அவரது கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீக்கியர்கள் குறித்த தனது கருத்தை திரும்பப் பெறுமாறு ராகுலிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “அமெரிக்காவில் எனது கருத்து குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்புகிறது.
நான் அமெரிக்காவில் பேசியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் எனது சீக்கிய சகோதர சகோதரிகளிடம் கேட்கிறேன். ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியரும் தங்கள் மதப் பழக்கவழக்கங்களை அச்சமின்றி சுதந்திரமாக கடைப்பிடிக்கும் நாடாக இந்தியா இருக்கக்கூடாதா என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.
நான் உண்மையைப் பேசியதால் பா.ஜ.க.வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் என்னை அமைதிப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் நான் எப்போதும் குரல் எழுப்புவேன்.