தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக தொடர்ந்துவரும் எல்லைப் பிரச்சனை, தற்போது தீவிரமான ராணுவ மோதலாக மாறியுள்ளது. இருநாடுகளின் எல்லைப் பகுதியில் வெடித்த இந்த மோதலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. பதற்றம் அதிகரித்த நிலையில், இருநாட்டு மக்களும் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்போடியாவின் பத்காவோ பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் பாக்கெட்டுகள் லாரியின் மூலம் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், கம்போடியா சண்டையை நிறுத்த அழைப்பு விடுத்ததை, தாய்லாந்து அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், நிலமையின் தீவிரம் குறையாமல் போகாததால், தாய்லாந்து முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தாய்லாந்து குடிமக்கள் தங்கள் நாட்டுக்குள் திரும்புமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததில் தங்களது நடுநிலைப்பணியின் பங்கு இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை வணிக ஒப்பந்தத்தின் மூலம் குறைத்ததுபோல், தற்போது தாய்லாந்து மற்றும் கம்போடியாவிடையேயும் சமரச முயற்சி எடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இதேசமயம், இந்த மோதலின் பின்னணி ஒரு பண்டைய கோயிலுக்கான உரிமை கோரலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலை மேலும் பதற்றமாக மாறக்கூடிய நிலை காணப்படுவதால், இரு நாடுகளுக்குமிடையே சர்வதேச சமுதாயம் சமரச பேச்சுவார்த்தையை வலியுறுத்தியுள்ளது. 817 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிரச்சனை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், எதிர்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதற்காக பலரும் கண்காத்திருக்கின்றனர்.