நாம்பென்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான நிலப்பிரச்சனையை மையமாகக் கொண்ட சண்டை, தீவிரமடைந்த நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்காக அவசர எச்சரிக்கையை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கோவில் பகுதியை சுற்றி மோதல் சூழல் உருவாகி, இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

மோதல் நிலைமை நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின் ஏழு மாகாண எல்லைப் பகுதிகளில் இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அங்கு இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையிலேயே தூதரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு, அவசர தேவைக்காக இந்தியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்துள்ளது. அவசர தேவையில் தொடர்பு கொள்ள: +855 92881676 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும் cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போதைய மோதல் சூழ்நிலையால் எல்லைப் பகுதிகளில் பயணங்களை தவிர்க்க வேண்டும். இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு தூதரகம் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளது.
இந்த பகுதியிலுள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.