ஒட்டாவா: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடரும் சூழலில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கனடா பிரதமர் மார்க் கார்னி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளில், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்துகள், சர்வதேச அளவில் வலுத்தலைகளை உருவாக்கியுள்ளன.

மார்க் கார்னி வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதையும், அதேபோல் அதன் அருகில் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழும் ஒரு சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடும் உருவாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கான முயற்சிகளில் கனடா நீண்ட காலமாக உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், வரும் மாதம் ஐ.நா.வில் இந்த அங்கீகாரம் நடைபெறும் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.
இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த நேரத்தில் கனடா அரசின் நிலைமாற்றம் ஹமாஸுக்குச் சிறந்த வெகுமதியாகும். இது காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்புக்கான முயற்சிகளை பாதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை தனிநாடு என அங்கீகரிக்க தயார் என்பதைத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கனடா எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச அரசியல் மேடையில் புதிய பாதையை உருவாக்கக்கூடியதாக காணப்படுகிறது.