ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணச் சான்றிதழை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கேட்டுக் கொண்டாலும், அதை வழங்க கனடா அரசு மறுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த அவர், தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை தீவிரமாக எழுப்பியுள்ளார். மேலும், நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட 6 இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பணிபுரிந்து வந்த 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்திய அரசு வெளியேற்றியது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கனடா அரசிடம் என்ஐஏ அதிகாரிகள் கேட்டிருந்தனர்.
ஆனால் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை அளிக்க கனேடிய அரசு மறுத்துவிட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் இறந்துவிட்டதால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிக்க அவரது இறப்பு சான்றிதழ் தேவை.
இதற்காக கனேடிய அரசை அணுகினோம். ஆனால் அவர்கள் இறப்பு சான்றிதழை வழங்க மறுத்துவிட்டனர். மேலும் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்பு சான்றிதழ் உங்களுக்கு ஏன் தேவை என்று கேட்கிறார்கள். இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.