ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வரும் 28ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என, அவரது சொந்த கட்சி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் காரணமாக இந்தியா மீது ட்ரூடோ நேரடியாக குற்றம் சாட்டி இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லிபரல் எம்.பி.க்களின் ரகசிய கூட்டத்திலும் ட்ரூடோ கலந்து கொண்டார். பின்னர் ஒவ்வொரு எம்.பி.க்கும் பேச இரண்டரை நிமிடம் வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி எம்.பி.க்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பகிரங்கமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடோ விலகக் கோரி 24 எம்பிக்கள் கையெழுத்திட்டனர். அக்டோபர் 28ஆம் தேதிக்குள் பிரதமர் பதவியை ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது கனேடிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.