லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்த இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லஸ், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற ஒரு முக்கிய தருணம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, இந்திய அணியின் செயலையும் பாராட்டினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருடன், மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், மன்னரின் நேரடி சந்திப்பை மிகுந்த மகிழ்ச்சியாக கொண்டார்.

சுப்மன் கிலின் பேச்சில், “மன்னர் சார்லஸ் எங்களிடம், ‘சிராஜ் அவுட் ஆனது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு ஸ்டம்சை அடித்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு நிச்சயமாக ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் எதிர்வரும் போட்டிகளில் நம் முழுத்திறமையையும் வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம்’ என்று பதிலளித்தேன்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “லார்ட்ஸ் டெஸ்டின் கடைசி மூன்று நாட்களில் ரசிகர்களின் ஆதரவு நம்மை வலிமைப்படுத்தியது. கடைசி நாள் வரை போட்டி உற்சாகமாக நகர்ந்தது. 22 ரன்னில் தோற்றாலும், கிரிக்கெட் தான் உண்மையில் வென்றது” என்றார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய அணி ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்காக மான்செஸ்டருக்குச் சென்றது. இந்த சந்திப்பு இந்திய அணிக்குப் பெரும் ஊக்கமாகவும், ஒரு வரலாற்று தருணமாகவும் அமைந்துள்ளது.